வேலூர் தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகள் தானம் வேன் மூலம் இதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது
வேலூர் தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
வேலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கவுதம்ராஜூம், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கோகிலாவும் (வயது 24) கடந்தாண்டு மே மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பிணியான கோகிலாவிற்கு ரத்தம் குறைவு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான கோகிலா கடந்த 4-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கோகிலாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். கோகிலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
ரத்த அழுத்தம் காரணமாக கோகிலாவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மூளை ரத்தக்கசிவை சரிசெய்ய டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோகிலா மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து கவுதம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த கோகிலாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கவுதம்ராஜ் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கோகிலாவின் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட இதயம், நுரையீரல் உடனடியாக சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த கோகிலாவின் கணவர் கவுதம்ராஜ் கூறுகையில், ‘திருமணமாகி ஓராண்டு கூட கோகிலா என்னுடன் வாழவில்லை. அவள் உடலளவில் என்னை விட்டு பிரிந்து சென்றாலும், தானமாக அளித்த உடல் உறுப்புகள் மூலம் எங்கேயாவது ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பாள். காதலர் தினத்தில் என்னுடைய மனைவி அவளுடைய இதயத்தை எனக்கு தராமல் வேறு யாருக்கோ கொடுக்கிறாள். என் மனைவியின் இதயம் எனக்காக துடிக்காவிட்டாலும் மற்றவருக்காவது துடிக்கட்டும்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
Related Tags :
Next Story