லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது: விழுப்புரம் அலுவலகத்தில் 2-வது நாளாக போலீசார் சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை


லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது: விழுப்புரம் அலுவலகத்தில் 2-வது நாளாக போலீசார் சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 2-வது நாளாக நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷ். இவர் கடலூர் வன்னியர்பாளையம் மரியசூசை நகரில் வசித்து வருகிறார். சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஜெயராமன் என்பவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூர் பகுதிகளில் அமைக் கப்பட்ட வீட்டுமனைகளை விற்க அனுமதி கேட்டு லோ கேசை அணுகினார். அப்போது அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.30 ஆயிரத்தை ஜெயராமன், கொடுத்த போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் லோகேசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் கைதான லோகேஷின் காரில் போலீசார் சோதனை நடத்தி அதில் இருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கடலூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, அங்கு கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை செய்ததில், விழுப்புரத்தில் உள்ள மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லோகேஷ் பொறுப்பேற்றுள்ளதும், இவர் பொறுப்பேற்று 10 மாத காலத்தில் வீட்டுமனைகளை விற்பதற்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் வந்துள்ளதும், இவற்றில் பெரும்பாலான மனுக்களுக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் பல கோடி ரூபாயை லோகேஷ் லஞ்சமாக வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், மூர்த்தி ஆகியோர் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஊழியர்களுடன் அலுவலக கதவை உள்பக்கமாக பூட்டி போலீசார் சோதனையை தொடர்ந்தனர். உதவி இயக்குனர் லோகேஷ் பொறுப்பேற்றதில் இருந்து அலுவலகத்திற்கு எத்தனை மனுக்கள் வந்துள்ளது, அவற்றில் எத்தனை பேருக்கு அனுமதி கொடுத்துள்ளார், இவ்வாறு அனுமதி கொடுத்ததன் மூலம் யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது குறித்து 100 வகையான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில் ஒரு கோப்புக்கு அனுமதி கொடுக்க அலுவலக ஊழியர்களுக்காக மட்டும் ரூ.30 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றிருப்பதும், இந்த தொகையை அலுவலக ஊழியர்கள் சரிசமமாக பிரித்துள்ளதும், இதுதவிர உதவி இயக்குனர், சதுர அடி ஒன்றுக்கு 4 ரூபாய் வீதம் லஞ்சமாக பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள நபர்கள் எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகையை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்றும், உதவி இயக்குனர் மட்டுமின்றி அலுவலக ஊழியர்கள் யார், யார் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story