திருநின்றவூர் பேரூராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு உடனுக்குடன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருநின்றவூர் பேரூராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆவடி,
திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகர், ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கட நகர், அந்தோணி நகர், அம்பிகாபுரம், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், இந்திரா நகர், பவானி நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள 18 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை கொட்ட தெருக்களில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் சேரும் குப்பைகளை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.
சமீப காலமாக பிரகாஷ்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் உள்ள தொட்டிகளில் இருந்து குப்பைகளை சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு சிதறி கிடக்கும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் மக்கள் மேல் விழுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரியாக அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக பிரகாஷ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் சரிவர அள்ளாமல் கிடக்கிறது. இதன் காரணமாக பிரகாஷ் நகர் மற்றும் சி.டி.எச். சாலையில் குப்பைகள் சாலையோரங்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. தற்போது தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாத காரணத்தால் அவை கீழே சிதறி விடுகின்றன. நாய், மாடு ஆகியவை குப்பைகளை கிளறி விடுகின்றன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் சரிவர குப்பைகளை அள்ளுவது இல்லை.
மேலும் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற போதுமான துப்புரவு ஊழியர்கள் இல்லை. சமீபகாலமாக பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர்களை அதிகாரிகளுக்கு டிரைவராகவும், மற்ற வேலைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஊழியர்கள் தட்டுப்பாட்டால் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி நோய்கள் பரவி வருகின்றன. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story