கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் முதன்மை செயல் அதிகாரி அறிவுறுத்தல்


கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் முதன்மை செயல் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 7:29 PM GMT)

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை செயல் அதிகாரி அறிவுறுத்தினார்.

அரியலூர்,

அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப்பணிகள் மற்றும், குடிநீருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையரும் முதன்மை செயல் அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் வருகிற கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆழ்குழாய் கிணறுகள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அலுவலர்களும் கண்காணித்து, அவற்றில் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக பழுது நீக்கம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பழுது ஏற்பட்டிருக்கும் காலங்களில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களிடம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், கட்டையன் குடிகாடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை பார்வையிட்டு முதன்மை செயல் அதிகாரி ஆய்வு செய்தார். மேலும் பொன்பரப்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும், பணியாளர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இதில், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, நகராட்சி ஆணையர்கள் திருநாவுகரசு, வினோத் மற்றும் வருவாய், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story