பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கால்வாய்களை சீரமைக்க மீண்டும் நிதி ஒதுக்க வேண்டும் உலக வங்கி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை


பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கால்வாய்களை சீரமைக்க மீண்டும் நிதி ஒதுக்க வேண்டும் உலக வங்கி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2019 3:45 AM IST (Updated: 15 Feb 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கால்வாய்களை சீரமைக்க மீண்டும் நிதி ஒதுக்க வேண்டும் என்று உலக வங்கி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி,

தமிழகத்திற்கு உலக வங்கி கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை கொண்டு கால்வாய் சீரமைத்தல் மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நிதி சரியாக பயன்படுத்தப்பட்டு உள்ளதா? தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து பொள்ளாச்சி அருகே அரசூரில் உலக வங்கி ஆலோசகர்கள் ராமசந்திர சம்மி, புவனேஸ்வரி கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு உலக வங்கி நிதியில் பணி மேற்கொள்ளப்பட்ட கால்வாய் மற்றும் மதகுகளை பார்வையிட்டனர். மேலும் கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு எப்படி தண்ணீர் வழங்கப்படுகின்றது. அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான தண்ணீர் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

இதற்கிடையில் உலக வங்கி அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், நீர்வள, நிலவள திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ததால் கால்வாய்களை பலப்படுத்தி, மதகுகள் சீரமைக்க முடிந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் பயனடைந்தனர். தற்போது விவசாயிகள் நிதி பங்களிப்பு மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கப்படும் நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு நீர்வள, நிலவள திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்தால் கால்வாய்களை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும். ஆகவே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளத்துறை, கால்நடைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் மார்க்கெட்டிங் ஆகிய 8 துறைகளுக்கு நீர்வள, நில வள திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை கொண்டு செய்த பணிகள் எப்படி? உள்ளது. திட்டம் நீடித்து நிலையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன் 50 எக்டேர் பரப்பளவில் தான் தென்னையில் ஊடுபயிராக கோ-கோ சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த திட்டம் வந்த பிறகு தற்போது 500 எக்டேர் பரப்பளவில் கோ-கோ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு நிதி ஒதுக்கவில்லை. இருப்பினும் ஒரு விவசாயியை பார்த்து மற்ற விவசாயிகள் கோ-கோ சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முன்னதாக உலக வங்கி அதிகாரிகள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட விவசாய பணிகள் எப்படி? உள்ளது என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டு அறிந்து கொண்டனர். மேலும் நீர்வள, நில வள திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகள் குறித்தும் ஆய்வு நடத்தினர். பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன்புதூர், அரசூர், எஸ்.பொன்னாபுரம், ஆனைமலை பகுதியில் சின்னப்பம்பாளையம், தாத்தூர், சுப்பேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story