கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைதான வாலிபர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்


கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைதான வாலிபர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:15 AM IST (Updated: 15 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

கோவை கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் கைதான வாலிபர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இருந்து 1½ அடி உயர ஐம்பொன் சிலை, அதில் இருந்த 6 கிராம் தங்க தாலி, தங்க சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

திருடப்பட்ட ஐம்பொன் சிலை பழமை வாய்ந்தது. அது பல லட்சம் மதிப்புள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் கோவில் அருகே சாக்கடை கால்வாய்க்குள் சாக்குமூட்டைக்குள் கட்டி வீசப்பட்ட நிலையில் கிடந்த ஐம்பொன் சாமி சிலையை போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக கோவில் அருகே உள்ள வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 3 மணிக்கு 2 பேர் கோவில் பூட்டை உடைத்து சிலையை திருடியது கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 32) என்பவர் சிலையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் அவரது நண்பரான முருகன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர்களுக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். ஆனால் உண்டியல் பணம் மற்றும் நகைகளை திருடும் நோக்கிலேயே சென்றதாகவும், நகை குறைவாக இருந்ததால் சிலையையும் திருடியதாகவும், சிலையை வெளியே போட்டு விட்டால் தப்பித்து விடலாம் என கருதி சாக்கடைக்குள் வீசியதாகவும் தண்டபாணி போலீசாரிடம் கூறினார்.

கோவிலில் சிலை திருடப்பட்டது குறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தண்டபாணி மீது அத்துமீறி நுழைதல், திருட்டு மற்றும் பழமையான பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தண்டபாணி கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான தண்டபாணி மீது ஏற்கனவே பஸ்சை உடைத்ததாக ஒரு வழக்கு உள்ளது. தலைமறைவாக உள்ள அவரது நண்பர் முருகன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story