கோவில் திருவிழாவில் தகராறு: 2 பேரை பிடித்து சென்ற போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கோவில் திருவிழாவில் தகராறு: 2 பேரை பிடித்து சென்ற போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 15 Feb 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு செய்ததாக 2 பேரை பிடித்து சென்ற போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்று இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ராசாம்பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியை காண சென்றனர். அப்போது ராசாம்பாளையத்தை சேர்ந்த சிலருக்கும், பூனாம்பாளையத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர். தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ராசாம்பாளையத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், மண்ணச்சநல்லூர் போலீசார் பூனாம்பாளையத்தை சேர்ந்த 2 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து பூனாம்பாளையத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணி அளவில் மண்ணச்சநல்லூர்-எதுமலை பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) புகழேந்தி, மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story