தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தடயங்களை சேகரித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி சென்னை சி.பி.ஐ. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 20 அமைப்புகளின் மீது 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டனர். அதன்பிறகு தூத்துக்குடியில் சி.பி.ஐ. முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கு இருந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். லேசான காயம் அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு நவம்பர் மாதம் 28-ந் தேதி சென்னை சி.பி.ஐ., போலீஸ், வருவாய்த்துறையினர் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தடயங்கள் சேகரிப்பு
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் இருந்த பல்வேறு ஆவணங்களை பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
துப்பாக்கி சூடு, தடியடியில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர்களின் காயங்களில் இருந்து துப்பாக்கி தோட்டா சிதறல்கள், லத்தி கம்பின் சிதறல்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த தடயங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் பெற்றனர். அந்த தடயங்கள் அடிப்படையில் எந்த துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story