புதிய பாலம் கட்டும் பணி: தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் ஓட்டம் திருப்பி விடப்பட்டது


புதிய பாலம் கட்டும் பணி: தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் ஓட்டம் திருப்பி விடப்பட்டது
x
தினத்தந்தி 15 Feb 2019 3:45 AM IST (Updated: 15 Feb 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக தண்ணீர் ஓட்டம் நேற்று திருப்பி விடப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக தண்ணீர் ஓட்டம் நேற்று திருப்பி விடப்பட்டு உள்ளது.

தண்ணீர் ஓட்டம் மாற்றம்

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலத்திற்கு அருகில் தற்போது ரூ.18 கோடி செலவில் கூடுதலாக ஒரு புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மிகப்பெரிய தூண்களை நிறுவி மேல்பகுதியை காங்கீரிட் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடும் பகுதியில் மட்டும் 2 தூண்களுக்கு இடையே இணைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் விரைவில் அந்த பணி நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஆற்றில் தண்ணீர் ஓட்டத்தை மாற்றி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மண் கொட்டி அடைக்கப்பட்டது. பின்னர் கிழக்கு பகுதியில் பாலம் விநாயகர் கோவில் இருந்த பகுதி வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டு உள்ளது. அங்கு காங்கிரீட் அமைப்பதற்காக தூண்கள், பலகைகள் ஓரிரு நாட்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

சாலை விரிவாக்கம்

இந்த பாலத்தின் நடுவே இருபுறமும் ரோட்டுடன் இணைக்கும் பகுதி பணியும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பாலத்தின் கிழக்கு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை, அறிவியல் மையம், பலாப்பழம் ஓடை, வண்ணார்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதே போல் மேற்கு பகுதியில் தேவர் சிலை, அண்ணா சிலை, சந்திப்பு வரை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகளையும் விரைவில் தொடங்க உள்ளனர்.

Next Story