இட்டமொழி அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


இட்டமொழி அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Feb 2019 3:00 AM IST (Updated: 15 Feb 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழி அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 4 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இட்டமொழி, 

இட்டமொழி அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 4 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேன் டிரைவர்

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகில் உள்ள கீழபண்டாரபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது30). அவருடைய மனைவி சத்தியா(27). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். பொன்ராஜ் வேன் டிரைவராக உள்ளார். இவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் தான் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சத்தியா குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சத்தியா கண் விழித்தார். கணவர் தான் வந்திருப்பதாக நினைத்து அவர் வீட்டுக்கதவை திறந்தார். அப்போது வீட்டுக்குள் 4 மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். சத்தியாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துள்ளார். அதை தடுத்த சத்தியாவை மீண்டும் 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். ஆனால் சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டவாறு அந்த 4 பேருடனும் அவர் போராடியுள்ளார்.

சங்கிலி பறிப்பு

அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் சத்தியா கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம நபர் ஒருவர் மீண்டும் இழுத்துள்ளார். அப்போது சங்கிலி அறுந்து, சத்தியா கையில் ஒரு பவுனும், மீதமுள்ள 2½பவுன் சங்கிலி மர்ம நபர் கையிலும் சிக்கி கொண்டது. பின்னர் அந்த சங்கிலியுடன் 4 மர்மநபர்களும் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சத்தியா திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, 4 மர்மநபர்களை தேடிவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story