மயக்க ஊசி போட்டு சின்னதம்பி யானையை பிடிக்க தயாராகும் வனத்துறை முன்னேற்பாடுகள் தீவிரம்


மயக்க ஊசி போட்டு சின்னதம்பி யானையை பிடிக்க தயாராகும் வனத்துறை முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:30 AM IST (Updated: 15 Feb 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகிறார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மடத்துக்குளம்,

கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானை சின்னதம்பியை கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட சின்னதம்பி யானை பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக் குளம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

அங்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு தனதுக்கு தேவையான உணவை மட்டும் உண்டு, அங்கிருந்த ஒரு குட்டையில் தங்கியது. இதை அறிந்த வனத்துறையினர் கும்கி யானைகளை கொண்டு வந்து அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது அங்கிருந்து செல்ல மறுத்து கும்கி யானைகளுடன் நட்பாக பழகியது. இதனால் சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெளியேறிய சின்னதம்பி அருகில் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்தது. அங்கிருந்து அதை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. காரணம் காலையில் சிறிது நேரமும், மாலையில் சிறிது நேரமும் மட்டுமே சின்னதம்பி யானை வெளியே வந்துவிட்டு பின்னர் மீண்டும் அடர்ந்த கரும்பு தோட்டத்துக்குள் சென்று பதுங்கிக்கொள்கிறது.

மேலும் கடந்த சில நாட்களாக கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்ற சின்னதம்பி யானை அங்கிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்றவற்றை வேரோடு சாய்த்து நாசம் செய்தது. இதனால் சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் உடனடியாக விரட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் வைக்கும் படியும், அதை கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதியில் விடுவதா? என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கான ஆயத்த பணிகளை நேற்று காலை முதல் வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனையடுத்து முதலில் சின்னதம்பி யானை இருக்கும் இடத்தின் அருகில் உள்ள, ராஜவாய்க்கால் பகுதியின் மேற்பரப்பில் பொக்லைன் எந்திரம் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதர் பகுதிகள் அனைத்தும் சுத்தப்படுத்தி சமன் செய்யப்பட்டது. பின்னர் நேற்று மதியம் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கி இருக்கும் சின்னதம்பி யானையை கண்காணிப்பதற்காக பழனியில் இருந்து ‘பறக்கும் கண்காணிப்பு கேமரா’ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கேமரா மூலம் சின்னதம்பி யானை எங்கு உள்ளது? என்று ஆய்வு செய்தனர். ஆனால் சின்னதம்பி யானை தெரியவில்லை.

மேலும் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்ற வசதியாக, அருகில் உள்ள ஒரு வயல் மற்றும் வாய்க்காலின் மேற்பரப்பு தேர்வு செய்யப்பட்டு, அங்கு லாரியை நிறுத்தி, யானையை ஏற்றும் வசதிகள் செய்யப்பட்டன. அத்துடன் சின்னதம்பி யானையை பிடித்து லாரியில் ஏற்றுவதற்காக கலீம், சுயம்பு ஆகிய 2 கும்கி யானைகளும் தயார் நிலையில் உள்ளன.

யானையை துன்புறுத்தக்கூடாது, அதை காயம் இன்றி பிடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த முறை சின்னதம்பியை பிடிக்கும் விஷயத்தில், வனத்துறையினர் மிகவும் கவனமாக உள்ளனர். சின்னதம்பி யானையை பாதுகாப்பாக எவ்வாறு பிடிப்பது? என்பது குறித்து ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் கணேசன், மற்றும் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் திலீப், கால்நடை மயக்கவியல் நிபுணர் டாக்டர் அசோகன் ஆகியோர் வனத்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கரும்பு தோட்டத்திற்குள் சென்ற சின்னதம்பி யானை மாலை 4 மணி வரை வெளியே வரவில்லை. பொதுவாக யானையை காலை 6 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் தான் பிடிக்க வேண்டும். ஆனால் சின்னதம்பி யானை மாலை 4.30 மணிக்கு மேல் தான் வெளியே வந்தது.

இதனால் 1½ மணி நேரத்தில் அதை பிடித்து லாரியில் ஏற்றுவது சிரமம் என்பதால் அதை பிடிக்கும் முயற்சி நேற்று கைவிடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடலாம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story