ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்


ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:15 AM IST (Updated: 15 Feb 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் குன்னூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களுக் கும் மேலாக அங்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து விட்டனர். மேலும் கடந்த மாதம் குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி செயலரை மக்கள் முற்றுகையிட்டனர்.

இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலிக்குடங் களுடன் திரண்டனர். பின்னர் கன்னியப்பாபிள்ளைபட்டி-தேனி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், ராஜதானி இன்ஸ்பெக்டர் முத்துமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர் கள், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒக்கரைப்பட்டி கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீட்டுக்குழாய் களில் திருட்டுத்தனமாக தண்ணீரை பிடிக்க பொருத்தப்பட்டிருந்த மோட்டார் களை திட்ட இயக்குனர் திலகவதி தலைமையிலான ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட ஒக்கரைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 45), பாண்டி (44) ஆகியோர் உள்பட 30 பேர் மீது ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 20 பேர் பெண்கள் ஆவர்.

Next Story