அய்யலூர் அருகே சாலையை சீரமைக்ககோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
அய்யலூர் அருகே சாலையை சீரமைக்ககோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே பாலத்தோட்டம்-செந்துறை செல்லும் சாலை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. தற்போது தார்சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்லும் கிணத்தப்பட்டி, அ.கோம்பை, காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, சாலையை சீரமைக்ககோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேற்று காலை பஞ்சந்தாங்கியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சை அ.கோம்பை பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்து, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து போக மறுத்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
அந்த பகுதியில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதத்துக்குள் (மார்ச்) சாலை சீரமைக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் போலீசார் கூறினர். இதனால் சுமார் 3 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story