ஆடியோ விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி. விசாரணை: பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி ஈசுவரப்பா குற்றச்சாட்டு


ஆடியோ விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி. விசாரணை: பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி ஈசுவரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஆடியோ விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளதாக ஈசுவரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

ஆடியோ விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளதாக ஈசுவரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குண்டர்களை அனுப்பி...

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு, குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்துகிறது. பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீட்டை தாக்கியவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் பொய் புகாரில் பா.ஜனதாவினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கணேஷ் எம்.எல்.ஏ.வை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?.

சித்தராமையா சதி

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பிரதமர் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். ஆடியோ உரையாடல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை மாநில அரசு அமைப்பதாக கூறியுள்ளது.

இந்த விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) மாநில அரசு தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த சிறப்பு விசாரணை குழு மூலம் பா.ஜனதாவுடன் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும் ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளார்.

எடியூரப்பா நிரபராதி

சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு சித்தராமையாவே காரணம். முதல்-மந்திரி குமாரசாமியை சிக்கவைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். இந்த வழக்கில் இருந்து எடியூரப்பா நிரபராதி என்று வெளியே வருவார்.

பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்ட அணி தேசிய மாநாடு பீகார் மாநிலம் பாட்னாவில் 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் இருந்து 65 பேர் கலந்து கொள்கிறோம்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story