பேரையூர், வாடிப்பட்டி பகுதிகளில் ஊராட்சி செயலர் பணிக்கு நேர்காணல்
வாடிப்பட்டி மற்றும் டி.கல்லுப்பட்டியில் ஊராட்சி செயலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளிப்பள்ளம், திருவாலவாயநல்லூர், தென்கரை, செம்மினிப்பட்டி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, குருவித்துறை, கச்சைகட்டி ஆகிய 8 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் அந்த காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வயது 18 முதல் 30 வரையிலும் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் திருவால வாயநல்லூர் பொது பிரிவினருக்கும், குட்லாடம்பட்டி பொது (பெண்), முள்ளிப்பள்ளம் பிற்படுத்தப்பட்டோருக்கும், கச்சைகட்டி பிற்படுத்தப்பட்டோர் (பெண்), செம்மினிப்பட்டி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பெண்), குருவித்துறை மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தென்கரை, கட்டக் குளம் ஆதிதிராவிடர்களுக்கும் என இடஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த 8 பணியிடங்களுக்கு 474 பேர் விண்ணப்பித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு நேற்று நேர்காணல் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம், திரு வாலவாயநல்லூர், தென்கரை, செம்மினிப்பட்டிக்கு காலையிலும், கட்டக்குளம், குட்லாடம்பட்டி, குருவித்துறை, கச்சைகட்டிக்கு மதியமும் என 2 பிரிவாக நேர்காணல் நடந்தது. உதவித்திட்ட அலுவலர் கணபதி தலைமையில் ஒன்றிய ஆணையாளர்கள் கண்ணன், கீதா ஆகியோர் நேர்காணல் நடத்தினர். துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் அழகுதுரை, கண்ணன், பாலாஜி, மார்நாடு, கதிரவன் மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வாளர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
இதேபோல் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வையூர், சந்தையூர், மத்தக்கரை, பாப்புரெட்டிபட்டி, புளியம்பட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் செயலர் பணி காலியாக உள்ளது. இதனையடுத்து 5 ஊராட்சிகளில் செயலர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பம் கோரப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமானோர் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர். 5 பதவிக்கு 293 பேர் விண்ணப்பித்தனர். நேற்று அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் 200 பேர் கலந்துகொண்டனர். நேர் காணலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன், பிரகாஷ் ஆகியோர் நடத்தினர்.
Related Tags :
Next Story