‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்’ மந்திரி மகாதேவ் ஜன்கர் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மராட்டிய மந்திரி மகாதேவ் ஜன்கர் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மராட்டிய மந்திரி மகாதேவ் ஜன்கர் தெரிவித்து உள்ளார்.
கால்நடைத்துறை மந்திரி
பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரீய சமாஜ் கட்சியை சேர்ந்தவர் மகாதேவ் ஜன்கர். இவர் தற்போது மராட்டிய அரசில் கால்நடை பராமரிப்பு துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
மாதா தொகுதியில்...
விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாராமதி அல்லது மாதா தொகுதியில் போட்டியிட உள்ளேன்.
மேலும் வரும் 24-ந் தேதி ராஷ்டிரீய சமாஜ் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் மும்பையில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் தங்கர் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் கோரிக்கை குறித்து வலியுறுத்தப்படும். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார்.
நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படாது என்பதை அறிவேன். ஆனால் பாராமதி மற்றும் மாதா தொகுதி ஒதுக்கப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபடி நாங்கள் எங்கள் கட்சி சின்னத்திலேயே இந்த தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்பவார்
மாதா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுமாறு கட்சியினர் வலியுறுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மந்திரி மகாதேவ் ஜன்கர், “சரத்பவார் ஒரு மிகப்பெரிய தலைவர். அவர் எங்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை அவரிடம் விட்டுவிடவேண்டும். தேசியவாத காங்கிரஸ் நீண்டகாலம் ஒரு கட்சியாக நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
Related Tags :
Next Story