கல்லூரி வளாகத்தில் தோழியை காதலிப்பதாக கூறிய மாணவரை தாக்கிய மாணவி


கல்லூரி வளாகத்தில் தோழியை காதலிப்பதாக கூறிய மாணவரை தாக்கிய மாணவி
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 15 Feb 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி வளாகத்தில் தனது தோழியை காதலிப்பதாக கூறிய மாணவரை, மாணவி தாக்கினார். இதனால் அவர்கள் 2 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர், ஒருவர் அதே கல்லூரி யில் படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். நேற்று முன்தினம் காதலர் தினம் என்பதால், தனது காதலை அந்த மாணவியிடம் சொல்ல அவர் முடிவு செய்தார்.

இந்த நிலையில், அந்த மாணவி தனது தோழிகளுடன் நடந்து சென்றார். அப்போது, அவருக்கு எதிரே வந்த அந்த மாணவர், தான் காதலித்து வரும் மாணவியிடம் காதலை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பதில் ஏதும் கூறாமல் கதறி அழ தொடங்கினார்.

உடனே அருகில் இருந்த தோழிகள் அந்த மாணவியை சமாதானப்படுத்தினார்கள். மேலும் அந்த மாணவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவியின் தோழி ஒருவர் திடீரென்று தனது காலில் அணிந்து இருந்த செருப்பை கழற்றி அந்த மாணவரை அடிக்க முயன்றார்.

அதை அந்த மாணவர் தடுத்ததுடன், அவரை தாக்கினார். உடனே அந்த மாணவியும் தனது கையில் இருந்த செருப்பால் அந்த மாணவரை தாக்கினார். இதையடுத்து சக மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து அவர்களை பிடித்து சமாதானப்படுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் அந்த மாணவி மற்றும் அவருடைய தோழி, சக மாணவ-மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் இந்த சம்பவம் உண்மை என்று அறிந்ததும், தகராறில் ஈடுபட்ட மாணவர் மற்றும் மாணவியை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

அத்துடன் இதுபோன்ற செயலில் ஈடுபடும் மாணவ- மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி மாணவரை, மாணவி ஒருவர் செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதி, காதலை சொல்ல வந்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த வீர பெண்மணிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story