குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:45 AM IST (Updated: 16 Feb 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.1.19 முதல் 31.3.19-ந் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31.12.18 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் 40 வயதும் முடிவடையாமல் இருக்க வேண்டும்.

தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்களுடன் அலுவலக வேலைநாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் 31.12.18-ந் தேதியில் பதிவுசெய்து ஒரு ஆண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் இவர்களுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பிற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் வழங்கப்படும். இதர பதிவுதாரர்களை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் தமிழக அரசால் தற்போது உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையை 3 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் அவர்கள் சுயஉறுதிமொழி ஆவணத்தை ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க தேவையில்லை. பொறியியல் பட்டதாரிகள், மருத்துவ படிப்பு, மற்றும் சட்டப்படிப்பு போன்ற தொழில் படிப்புகளை படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற இயலாது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story