புயலில் சாய்ந்த அனைத்து தென்னை மரங்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் சாலை மறியல்


புயலில் சாய்ந்த அனைத்து தென்னை மரங்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 7:18 PM GMT)

புயலில் சாய்ந்த அனைத்து தென்னை மரங்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வாய்மேடு, 

நாகை மாவட்டம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் வெள்ளிகிடங்கு கிராமத்தில் சுமார் 500் எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் முழுவதும் சாய்ந்து விழுந்தன. இதனால் ஆயிரக்கணக்காண விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும் சிறு குறு விவசாயிகள் விழுந்த தென்னை மரங்களை அகற்ற கூட வருமானம் இல்லாமல் உள்ளனர்.

இந்த நிலையில தமிழக அரசு, புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு ரூ.1,100 நிவாரணமாக அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், வாய்மேட்டை அடுத்த வெள்ளிகிடங்கு பகுதியில் 176 எக்டேர் புறம்போக்கு நிலத்தில் தென்னை மரங்களை 400 விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஒரு மரத்திற்கு ஆண்டுக்கு ரூ.8 வீதம் தூசி பட்டா என்ற பெயரில் விவசாயிகள் வரி கட்டி வருகின்றனர். புயலில் வெள்ளிகிடங்கு பகுதியில் புறம்போக்கு நிலத்தில் இருந்த தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்தன. அதுவரை சாய்ந்து விழுந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை

புயலில் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என அரசு அறிவித்திருந்த நிலையில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் கேட்டு இந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கும் நாகை மாவட்ட கலெக்டர், பேரிடர் மேலாண்மை அதிகாரிக்கும் விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், புயல் தாக்கி 3 மாதங்கள் ஆகியும் இதுவரை நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களுக்குமம் நிவாரணம் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் விவசாயிகளை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Next Story