பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும், என கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும், என கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பணிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமை தாங்கினார்.
அப்போது கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது;-
சீரமைப்பு பணிகள்
மாவட்டத்தில் பொது மக்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் வினியோகத்துக்கான மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் வழங்குவதில் எந்தவித பிரச்சினைகளும் இருக்கக்கூடாது. மேலும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.சுகாதார வளாகங்களை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் சீரமைப்பு செய்திட வேண்டும். ஜூன் மாதம் 30-ந்தேதி வரை குடிநீர் வழங்கிட அணைகளில் போதிய நீர் உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அங்குள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகங்களில் உள்ள கழிப்பறை நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவைகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எந்த வித புகாருக்கும் இடமின்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story