சீட்டு பணம் திரும்ப கிடைக்காததால் காதல் தம்பதி தற்கொலை முயற்சி


சீட்டு பணம் திரும்ப கிடைக்காததால் காதல் தம்பதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2019 3:45 AM IST (Updated: 16 Feb 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சீட்டு பணம் திரும்ப கிடைக்காததால் காதல் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

பழனி, 

பழனி அருகே உள்ள கருப்பகவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 26). தச்சு வேலை செய்து வருகிறார். இவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முருகன் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் ரூ.2½ லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அடைப்பதற்காக தெற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சீட்டு போட்டு, பணம் செலுத்தி வந்ததாகவும், அது முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் முருகனிடம் பணம் கேட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முருகன், சீட்டு தொகை கட்டி வந்த பெண்ணிடம் தனது சீட்டு பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் அந்த பெண், பணத்தை தர முடியாது என்று கூறி, அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பார்களே? என்று முருகன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் முருகன் தனது மனைவியுடன் விஷம் குடித்தார். இதைக்கண்ட முருகனின் தம்பி தமிழரசு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story