நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில் இன்று ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா அலங்காநத்தத்தில் இன்று (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் 350 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சப்-கலெக்டர் கிராந்தி குமார் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், வாடிவாசலின் இருபுறமும் அரசு அலுவலர்கள் ஜல்லிக்கட்டை கண்காணிக்க ஏதுவாக தனியாக அமைக்கப்பட்ட மேடையையும், போட்டி ஏற்பாட்டாளர்கள் அமருவதற்காக அமைக்கப்பட்ட மேடையையும் கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்.
அதேபோல் மாடுபிடி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்காக தனியாக அமைக்கப்பட்ட பாதை, மைதானத்திற்குள் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகள், மைதானத்தை விட்டு காளைகள் எளிதில் வெளியேறும் வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பிற்காக மைதானத்தில் தேங்காய்நார் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், தாசில்தார் பிரகாசம் உள்பட தீயணைப்பு துறை, காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story