கடையநல்லூர் பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


கடையநல்லூர் பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நெல்லை, 

கடையநல்லூர் பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி கலெக்டர்கள் ஆகாஷ், மணீஷ்நாரணவரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்த நெல் பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவாதாக அதிகாரிகள் கூறினார்கள். அப்போது விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் விவசாயிகள் கூட்டத்திற்குள் வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து பேசியவர்களை அமருங்கள் என்று கூறினார்கள். இதற்கு விவசாய சங்க செயலாளர் பெரும்படையார் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் போலீசார் கூட்ட அரங்கில் அதிக அளவில் இருந்தனர்.

பயிர் காப்பீடு

பெரும்படையார்:- கஜா புயல் நேரத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, பகுதியில் பயிரிடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்தன. அந்த வாழைகளுக்கு பயிர்காப்பீடு செய்தும் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

பழனிச்சாமி:- தென்னங்கன்று விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் வாங்கிய கரும்பை அரைத்து சீனி எடுத்து அதை விற்பனை செய்து விட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு கரும்புக்கு உரிய பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் விரைவில் கொடுத்துவிடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பணம் கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள். எனவே கலெக்டர், அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர்:-அந்த ஆலைக்கு நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் கொடுக்கவில்லை என்றால் அங்குள்ள பொருட்களை ஜப்தி செய்து அதை விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

பொன்னுத்தாய்:-சிறுதானியத்தின் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை சுத்தம் செய்கின்ற எந்திரம் வாங்கவேண்டும்.

கலெக்டர்:-சிறுதானிய பொருட்கள் விளைச்சலுக்கும், விற்பனைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு மகளிர் திட்டம் மூலம் கடனுதவி வழங்கப்படும்.

நெல் அறுவடை

நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெறுவதால் அறுவடை எந்திரம் அதிக அளவில் கொண்டு வரவேண்டும். கொள்முதல் நிலையங்கள் அதிகம் திறக்கவேண்டும். நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. அந்த பணத்தை உடனே வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கலெக்டர்:-நெல்லை மாவட்டத்தில் நெல் அறுவடை அதிக அளவில் நடைபெறுகின்ற இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களும், நடமாடும் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. பணம் விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செந்தில்குமாரசாமி:-கருப்பாநதி அணையை கான்கிரீட் அணையாக மாற்றவேண்டும். அணையை தூர்வார வேண்டும். அணை கட்டியநாளில் இருந்து இதுவரை தூர்வாராமல் கிடக்கிறது இதனால் நீர்மட்டம் குறைகிறது.

யானைகள் அட்டக்காசம்

ஜாகீர்உசேன்:- கடையநல்லூர், வடகரை பகுதியில் காட்டு யானைகள் வனத்தையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. யானைகளை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றார். இவருக்கு ஆதரவாக பல விவசாயிகள் களக்காடு, கடையம், கடனாநதி அணைப்பகுதியிலும் யானை, காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது என்று விவசாயிகள் கூறினார்கள். அப்போது வனத்துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வன அலுவலர் திருமால்:- யானைகள் எந்த பகுதியில் வருகிறது என்று தகவல் தெரிவித்தால் உடனே யானையை காட்டுக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் என 10 பேர் அடங்கிய குழு உள்ளது. இந்த குழுவினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டி வருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்கு உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். யானைக்கு வெட்டப்பட்ட அகழி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காட்டு பன்றிகளையும் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆறுமுகதேவேந்திரன்:-ஈரோடு மாவட்டத்தில் காட்டுபன்றிகளை சுட உத்தரவிடப்பட்டு உள்ளது, அதேபோல் நமது மாவட்டத்திலும் பன்றிகளை சுட உத்தரவிட வேண்டும். பன்றிகளால் பயிர்கள் அதிகம் சேதம் அடைந்து உள்ளன.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story