என்ஜினீயர் சுவாதி கொலை-ராம்குமார் தற்கொலை வழக்கு: நெல்லையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை
என்ஜினீயர் சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
நெல்லை,
என்ஜினீயர் சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
பெண் என்ஜினீயர் கொலை
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 24-6-2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.
இவர், சென்னையில் தங்கி வேலை செய்து வந்த போது, சுவாதியை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். அவரது காதலை ஏற்காததால் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராம்குமாரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் தற்கொலை
இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் 18-9-2016 அன்று மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.
ஆனால் ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
மரணத்தில் சந்தேகம்
சுவாதி கொலை வழக்கில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை. எனது மகனை வேண்டுமென்றே கொலை வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். எனவே ராம்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டில் ராம்குமாரை போலீசார் கைது செய்த போது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறினர். போலீசார் தான் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர்.
ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அது முற்றிலும் தவறு. ஜெயிலில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நெல்லையில் விசாரணை
சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சத்யபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ண பிரபு, இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே இதுதொடர்பாக பரமசிவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர், புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடன் வக்கீல் ராம்ராஜ் வந்து இருந்தார். பரமசிவம் தனது மகன் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை பற்றி அதிகாரிகள் முன்னிலையில் விளக்கி கூறினார். அவரிடம் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “பரமசிவம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிந்து மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்போம்.” என்றனர்.
மாணவர் மர்மசாவு
இதேபோல் குற்றாலம் விடுதியில் மர்மமான முறையில் இறந்த மாணவன் கார்த்திக் ராஜா சாவு குறித்தும் புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தேவேந்திரன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story