அய்யம்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் படுகாயம்


அய்யம்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 8:14 PM GMT)

அய்யம்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

பட்டிவீரன்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் சின்ன அய்யம்பாளையம் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு கடந்த 3-ந் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அதனை ஆத்தூர் தாசில்தார் பிரபா தொடங்கி வைத்தார். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், ஆத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., பி.கே.டி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களத்தில் இறங்கும்முன் மாடுபிடி வீரர்கள் முறைப்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

போட்டியில் திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 330 காளைகள் பங்கேற்றன. மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த மாடுபிடி வீரர்கள் மட்டும் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர். அதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அவற்றில் 7 வீரர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, கட்டில், எல்.இ.டி. டி.வி.க்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மைதானத்தில் கேலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தி கோஷமிட்டனர். பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.

Next Story