2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி விஷம் குடித்தாள்
சேத்தியாத்தோப்பு அருகே 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, விஷம் குடித்தாள். அவளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 12-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மாணவி, தனது பெரியம்மா வீட்டுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றாள்.
பின்னர் நீண்டநேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவளை தேடி பார்த்தனர். அப்போது அவள், அங்குள்ள கோவில் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்தாள். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டாள். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அந்த மாணவியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவள் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி, பெரியம்மாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்தபோது தன்னை அதே பகுதியை சேர்ந்த பாலகுரு மகன் திலகர், துரைக்கண்ணு மகன் ஜெய்சங்கர் ஆகியோர் அடித்து தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு வந்து, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிக்கும் மதுபிரியர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், டாஸ்மாக் அதிகாரியிடமும் மனு கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story