ராமநத்தம் அருகே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தலைமை ஆசிரியை பலி


ராமநத்தம் அருகே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தலைமை ஆசிரியை பலி
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தலைமை ஆசிரியை பலியானார்.

ராமநத்தம்,

ராமநத்தத்தை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 56). இவர் பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி(52). இவர் வள்ளிமதுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் செல்வமணி, வள்ளி மதுரத்தில் இருந்து ராமநத்தம் நோக்கி தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார்.

கீழகல்பூண்டி அருகே வந்துகொண்டிருந்த போது முன்னாள் கரும்பு ஏற்றி சென்ற லாரியை செல்வமணி முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வமணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறி, இறங்கியதில் செல்வமணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான செல்வமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story