தேவேகவுடா விஷம் குடிப்பதை காண காத்திருக்கிறேன்: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசிய வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டது பா.ஜனதா


தேவேகவுடா விஷம் குடிப்பதை காண காத்திருக்கிறேன்: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசிய வீடியோவை டுவிட்டரில்  வெளியிட்டது பா.ஜனதா
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

தேவேகவுடா விஷம் குடிப்பதை காண காத்திருக்கிறேன் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசிய வீடியோவை பா.ஜனதா டுவிட்டரில் வெளியிட்டது.

பெங்களூரு, 

தேவேகவுடா விஷம் குடிப்பதை காண காத்திருக்கிறேன் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசிய வீடியோவை பா.ஜனதா டுவிட்டரில் வெளியிட்டது.

ஆடியோ வெளியீடு

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் நாகனகவுடா. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவரது மகன் ஷரண்கவுடாவிடம் எடியூரப்பா பேரம் ேபசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட 2-வது ஆடியோவில் பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரை பற்றி அவதூறாக பேசுவது போன்று இடம் பெற்றது. இதனை தொடர்ந்து ஹாசனில் உள்ள பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. வீடு மீது ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கல்வீசி தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரமேஸ்வர் பேசிய வீடியோ

இந்த நிலையில் பா.ஜனதா கட்சி தங்கள் டுவிட்டர் பக்கத்தில், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் 2013-ம் ஆண்டு பேசிய வீடியோவை வெளியிட்டது. அதில் 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றும், இல்லாவிட்டால் நான் விஷம் குடிப்பேன் என்றும் தேவேகவுடா கூறியதை செய்தித்தாள்கள் வழியாக படித்தேன். ஆனால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளது. இன்னும் தேவேகவுடா விஷம் குடிக்கவில்லை. அவர் எப்போது விஷம் குடிப்பார் என்று நான் காத்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியதாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோைவ சமூக வலைத்தளங்களில் ஏராளமானவர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

மரணத்தை எதிர்நோக்கி...

இதற்கு பதில் அளித்து உள்ள பரமேஸ்வர், பா.ஜனதாவிடம் இருப்பது ஒரே ஒரு திறமை தான். அது என்ன என்றால் பழைய வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிடுவது தான். இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதன் மூலம் மூத்த மற்றும் அரசியலில் அனுபவம் வாய்ந்த தேவேகவுடாவின் மரணத்தை பா.ஜனதாவினர் என்ன எதிர்நோக்கி உள்ளனர் என்பதை காட்டுகிறது என்றார்.

Next Story