போலீஸ் துறை நியமனத்தில் பெண்களுக்கு 25 சதவீதம் வழங்க முடிவு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு


போலீஸ் துறை நியமனத்தில் பெண்களுக்கு 25 சதவீதம் வழங்க முடிவு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு
x
தினத்தந்தி 15 Feb 2019 11:00 PM GMT (Updated: 15 Feb 2019 9:50 PM GMT)

தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு, 

தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

சரோஜினி மகிஷி அறிக்கையின்படி கா்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு

முக்கியமாக சி மற்றும் டி பிரிவு வேலைகளில் இந்த இட ஒதுக்கீடு முடிவு அமல்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தவறினால் நடவடிக்கை எடுக்க வசதியாக மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.

இந்த சட்ட திருத்த விதிமுறைகளை மீறும் தனியார் நிறுவனங்கள் குறித்து அந்த குழுவிடம் புகார் செய்யலாம். மேலும் தனியார் நிறுவனங்கள் தங்களின் வேலைகளில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

பெண்களுக்கு 25 சதவீதம்

கர்நாடக போலீஸ் துறையில் காவலர்கள் உள்பட 8 பிரிவுகளில் பணி நியமனத்தில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசின் திட்டங்களை பெற தற்போது உள்ள மாற்றுத்திறனாளிகளின் வகை 7-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டம் மற்றும் உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

Next Story