கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு தென்னை வாரிய தலைவர் பேச்சு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தென்னை வாரிய தலைவர் ராஜூ நாராயணசுவாமி பேசினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் தென்னை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்திய உனவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் தென்னை வாரிய தலைவர் ராஜூ நாராயணசுவாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நம் நாட்டின் வளத்தில் வேளாண்மையின் பங்கு 17 சதவீதமாக இருக்கிறது. இதன்மூலம் 50 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கடுமையாக உழைத்தாலும் அதற்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. வேளாண்மையில் மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தியின் தேவை அதிகரித்துள்ளது.
தென்னையில் 25 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க முடியும். இதை நியாயமான விலையில் கொடுக்க முடியும். அதற்கான முயற்சியை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். 2-வது பசுமை புரட்சியை பொருத்தவரை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்தியஅரசு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்காக ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.80 கோடியை மத்தியஅரசு விடுவித்துள்ளது. இது தவிர ரூ.10 கோடியை தென்னை வளர்ச்சி வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயத்துக்கு புத்துயிரூட்டப்பட உள்ளது. அதாவது மீண்டும் தென்னங்கன்றுகளை நடுதல், தரமான விதைகள் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகத்தின் மூலம் தென்னையில் இருந்து ஐஸ்கிரீம், தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் இந்த கழகத்துடன் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் பேசும்போது, தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் எடுப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரா பானத்தை பொடியாக மாற்றும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறோம்.
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை கொண்டு வந்து மரத்தூளாக்கி தட்டுகள் தயாரித்து வருகிறோம். இதன் விலை ரூ.3 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக்கு மாற்றாக இருக்கும். எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. இந்த தட்டுக்கள் நீர் புகாத வகையில் உள்ளது. ஐஸ்கிரீம் மற்றும் இதர உணவு பொருட்கள் பரிமாற ஏதுவாக அமைகிறது என்றார்.
முடிவில் தொழில்நுட்ப பரவலாக்கல் துறை தலைவர் அமுதசுரபி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story