குளத்தூர்–திருவெற்றியூர் இடையே கண்மாயில் பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


குளத்தூர்–திருவெற்றியூர் இடையே கண்மாயில் பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 10:29 PM GMT)

குளத்தூர்– திருவெற்றியூர் இடையே கண்மாயில் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி,

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவாடானை தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் 8 இடங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. பெரிய கீரமங்களம், கல்லூர், திருவாடானை, ஆதியூர், அரும்பூர், அச்சங்குடி, குளத்தூர், திருவெற்றியூர் ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருவாடானை பாரதிநகர் பகுதியில் அதிகஅளவில் மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வாய்ப்புகள் உள்ளதால் டெங்கு போன்ற நோய்கள் அடிக்கடி பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். குளத்தூர் கண்மாயில் திருவெற்றியூர் செல்வதற்கு பாலம் அமைக்க வேண்டும், அரும்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும். மேலும் இக் கிராமத்தில் உள்ள பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகிறது, எனவே தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஆதியூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை அதிகஅளவில் இருந்து வருவதால் புதிய ஆழ்குழாய் அமைத்து ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து தரவேண்டும். கருப்பூர் கிராமத்தில் ரே‌ஷன் கடை சேவை மையம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வசதியும், அச்சங்குடி, பெரிய கீர மங்கலம் ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், இதேபோல் திருவாடானை ஊராட்சி பண்ணவயல் கிராமத்திற்கு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனியாக அமைத்து தர வேண்டும். திருவாடானை சுமத்துவபுரம் கட்டப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசால் எந்தவித மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்குள்ள சாலைகளை புதிய சாலைகளாக அமைத்து தருவதுடன் வீடுகள் அனைத்தையும் மராமத்து செய்து தர வேண்டும். கூடுதல் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைத்து தர வேண்டும்.

இப்பகுதியில் குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு குடியிருப்பதற்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும். திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதால் இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் தேவை அதிக அளவில் உள்ளது.

எனவே குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம், தமிழக அரசும் புதிதாக ராட்சத ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். மேலும் திருவாடானை தாலுகா விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதுடன் பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் முகமது முக்தார், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன், பொதுக்குழு உறுப்பினர் ஆணிமுத்து, மாவட்ட பிரதிநிதி ராஜந்திரன், திருவாடானை தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கண்ணன்,தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், சுரேந்திரன், பாண்டி, முத்துராமன், கண்ணன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாலா, ராஜிவ் காந்தி, மூர்த்தி, செல்லப்பா, திருவெற்றியூர் பெருமாள், குமரேசன், கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story