தோகைமலை அருகே அரசு பஸ் மோதியதில் கொத்தனார் பலி பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு


தோகைமலை அருகே அரசு பஸ் மோதியதில் கொத்தனார் பலி பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே அரசு பஸ் மோதியதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி வேங்கடத்தான்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வேங்கடத்தான்பட்டியில் இருந்து ராச்சாண்டார்திருமலை ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கு கொத்தனார் வேலை செய்ய தனது மனைவி லோகம்பாளை அழைத்து சென்று, கட்டிடம் கட்டும் பகுதியில் விட்டார். பின்னர் கட்டிடத்திற்கு தேவையான சென்டிரிங் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவிற்கு வழிகாட்ட அருகில் இருந்த ராச்சாண்டார்திருமலை பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரம் வந்து நின்று கொண்டு இருந்தார்.

அதேபோல் ராச்சாண்டார்திருமலை ஊராட்சியில் உள்ள அழகாபுரியை சேர்ந்த நடராஜ் (45), மற்றொரு நடராஜ் (48), சத்துணவு உதவியாளர் சுப்பன் என்பவரது மனைவி தங்கம்மாள் (50) ஆகியோரும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது திருச்சி சத்திரத்தில் இருந்து தோகைமலை அருகே உள்ள பாதிரிபட்டிக்கு பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் ராச்சாண்டார்திருமலை பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் எதிர்பாராதவிதமாக அருகே சாலை ஓரம் வலது புறம் நின்று கொண்டு இருந்த கொத்தனார் முத்துசாமி, நடராஜ், மற்றொரு நடராஜ், தங்கம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துசாமி இறந்தார்.

மேலும் நடராஜ், மற்றொரு நடராஜ், தங்கம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பஸ் மோதியதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. அங்கு இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராச்சாண்டார்திருமலையை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை கண்டித்தும், ராச்சாண்டார்திருமலை பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரியும், இறந்த முத்துசாமியின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரியும் தோகைமலை அருகே திருச்சி-தோகைமலை சாலையில் உள்ள ராச்சாண்டார்திருமலை பஸ் நிறுத்தத்தில் மறியல் செய்தனர். அப்போது முத்துசாமியின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் அதிகாரிகள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். கலெக்டர் அன்பழகன் காவல் துறை அறிக்கை வந்தவுடன் அரசு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story