திருச்சி அருகே மீனவர் வலையில் சிக்கிய சாமி சிலைகள் கடத்தி வரப்பட்டதா? போலீசார் விசாரணை
திருச்சி அருகே மீனவர் வலையில் 2 சாமி சிலைகள் சிக்கியது. அந்த சிலைகள் கோவிலில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே காவிரி ஆற்றில் பெருவளை வாய்க்கால் பிரியும் இடத்தில் நேற்று அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆற்றில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மீனவரின் வலையில் பெரிதாக ஏதோ சிக்கியதுபோல இருந்ததால் அவர் ஆற்றில் இறங்கி வலையை பார்த்தார். அப்போது வலையில் 2 சாமி சிலைகள் சிக்கியிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, சக மீனவர்கள் உதவியுடன் அந்த சிலைகளை எடுத்து பார்த்த போது அவை, விநாயகர் மற்றும் நடராஜர் சிலைகள் என தெரிய வந்தது. இது குறித்து வாத்தலை போலீசாருக்கும், நெ.2 கரியமாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விரைந்து வந்து சிலைகளை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 2 சிலைகளும் 2 அடி உயரம் உள்ளது. அவை, ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவற்றை கோவிலில் இருந்து யாரேனும் கடத்தி செல்லும் வழியில் போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிவிட்டு சென்றிருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். மீட்கப்பட்ட சிலைகள் திருச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் பட்டது.
Related Tags :
Next Story