சின்னாளபட்டி அருகே குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
சின்னாளபட்டி அருகே குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி அருகே போக்குவரத்து நகர் உள்ளது. இந்த பகுதிக்கு ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து பழுப்பு நிறத்தில் வருவதாக சுகாதார துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் திண்டுக்கல்லில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் போக்குவரத்து நகருக்கு நேற்று வந்தனர். அந்த பகுதியில் வரும் குடிநீரை சோதனைக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து ஆலமரத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் தண்டபாணியிடம் கேட்டபோது, போக்குவரத்து நகரில் ஊராட்சி சார்பில் 32 பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு பகுதிக்கு மட்டும் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்ய முடியாததால் அந்த பகுதியில் உள்ள 2 பொது குழாய்க்கு மட்டும் ஆழ்துளை கிணற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த 2 குழாய்களில் மட்டும் சாக்கடை நீர் கலந்து வருவதாக சில தினங்களுக்கு முன் புகார் வந்தது. இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டார். இதல் குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் குழாய் செல்லும் வழியில் உள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுநீருக்காக உறிஞ்சு குழி அமைத்துள்ளனர். அதில் ஏதோ ஒரு இடத்தில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக சாக்கடை நீர் கலப்பது தெரியவந்தது. இதனால் ஒவ்வொரு பகுதியாக தோண்டி பார்த்து வருகிறோம். இன்னும் சில தினங்களில் சாக்கடை நீர் கலப்பதை கண்டுபிடித்து சரி செய்து விடுவோம் என்றார்.
Related Tags :
Next Story