3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 3:45 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களுக்கு ஷிரிஸ்(வயது 3½) என்ற மகன் இருந்தான். சிவக்குமார் துரைசாமிபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த அதேபகுதியை சேர்ந்த ரோஸ்லின்பாக்கியராணி (வயது 25), சிவக்குமாருக்கு அறிமுகமானார். அதன்பிறகு இருவரும் நட்பாக பழகி வந்தனர். அதன் அடிப்படையில் சிவகுமார் தனது செல்போன் கடையில் அவரை வேலைக்கு சேர்த்தார்.

அதன்பிறகு செல்போன் கடையின் கல்லாபெட்டியில் இருந்து ரோஸ்லின்பாக்கியராணி பணம் திருடியதை அறிந்த சிவக்குமார் அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி மதியம் 12.30 மணி அளவில் சிவக்குமாரின் 3½ வயது மகன் ஷிரிஸை கொஞ்சுவது போல் தூக்கி சென்று, கீழப்புதூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு ஷிரிஸை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், சிறிய கத்தியால் முகம், மார்பு மற்றும் உயிர்நிலையில் கிழித்தும் கொலை செய்தார்.

பின்னர் சிறுவனின் உடலை தூக்கி கொண்டு சிவகுமார் வீட்டுக்கு வந்த அவர் சிறுவன் தூங்குவதாக கூறி வீட்டில் படுக்க வைத்துவிட்டு சென்று விட்டார். சிறிதுநேரத்தில் தனது மகன் இறந்து கிடந்ததை கண்ட லெட்சுமிபிரபா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரோஸ்லின் பாக்கியராணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி குமரகுரு நேற்று தீர்ப்பு கூறினார். அதில், “குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு 2 பிரிவுகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும்” விதித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார். இதையடுத்து ரோஸ்லின் பாக்கியராணியை போலீசார் திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர். 

Next Story