சமணர் அடையாளங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்காதது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி


சமணர் அடையாளங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்காதது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Feb 2019 4:20 AM IST (Updated: 16 Feb 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

சமணர் அடையாளங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்காதது ஏன்? என்று தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

மதுரை சமணர் பழங்கால மையத்தின் செயலாளர் ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் 450–க்கும் அதிகமாக சமணர் அடையாள சின்னங்கள் உள்ளன. 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழ் பாரம்பரியத்தில் சமணர்கள் பங்கெடுத்ததற்கு சிலப்பதிகாரம், வளையாபதி இலக்கியங்கள் சான்றாக உள்ளன. மதுரையில் மட்டும் 26 சமணர் குகைகளும், 140 கல் படுகைகளும் உள்ளன. இந்த சான்றுகள் கி.மு.300 முதல் கி.பி.900–க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை.

இந்த குகை, கல்படுகைகளில் வட்டெழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ்மொழி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு சான்றாக இருக்கும் சமணர் குகைகளையும், படுகைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குவாரி நடவடிக்கைகளால் சமணர் அடையாள சின்னங்கள் சிதைக்கப்படுகின்றன.

இதனால் மதுரையில் உள்ள சமணர் அடையாளங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், யானைமலை, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட இடங்களில் உள்ள சமணர் அடையாள சின்னங்களை பாதுகாக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “பழமையான வரலாறு தொடர்பாக 1 லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. இதில் 55 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் தொடர்பானவை. தமிழின் தொன்மைக்கு சான்றாக இருக்கும் அடையாளங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறியது அதிர்ச்சி அளிக்கிறது. பழமை குறித்து பெருமை பேசுகிறோம். ஆனால் பாதுகாக்க தவறிவிடுகிறோம்“ என்றனர்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மதுரையில் உள்ள சமணர் அடையாளங்கள் அனைத்தையும் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்காதது ஏன்? பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்காமல் இருக்கும் வரலாற்று சான்றுகள் எங்கெங்கு உள்ளன? அவை எப்போது பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்படும்? பாரம்பரிய நினைவுச்சின்னங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாதுகாப்புக்காக எத்தனை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? என்பது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 4–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story