ஜெயலலிதாவின் திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
ஜெயலலிதாவின் திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை,
மதுரையில் அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலம்மாள் அரங்கில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி ஆகியோர் வரவேற்று பேசினார்கள். பேரவை நிர்வாகிகள் தமிழரசன், வெற்றிவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கியும், தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. அரசு நிலைக்குமா, ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியமா என்று கேள்வி கேட்டவர்களுக்கு முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் பதிலடி கொடுத்துள்ளார்கள். ஏளனம் பேசியவர்களை எல்லாம் ஏறெடுத்து பார்க்க வைத்துள்ளோம். அதற்கு காரணம் கர்வமில்லாத முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் தான். ஜெயலலிதா காட்டிய அறவழியில் தொண்டர்களோடு இணைந்து அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. யாரும் பிறக்கும் போது தலைவர்களாக பிறக்கவில்லை. மக்கள் பணி, பொதுப்பணி மூலம் தான் அவர்கள தலைவர்களாக உயர்ந்து முதல்வராகவும், துணை முதல்வராகவும் உயர்ந்திருக்கின்றனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் செய்யும் பொய் பிரசாரத்தை முறியடிப்பது தான் அம்மா பேரவையின் நோக்கமாகும். தாலிக்கும் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதிஉதவி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தற்போது அசாம் மாநிலத்திலும் கொண்டுவரப்பட்டுஉள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதின் மூலம் 11 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஸ்டாலின் ஊர், ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி அ.தி.மு.க. குறித்து பொய் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு கூட்டம் வருவதில்லை.
கடுமையான நிதிச்சுமையிலும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக தி.மு.க.வினர் கோர்ட்டுக்கு சென்றார்கள். தற்போது அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் 60 லட்சம் குடும்பத்தினருக்க ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக அவர்கள் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் மக்களிடம் எப்படி வரமுடியும்.
ஜாக்டோ–ஜியோ போராட்டம் நடத்தியும் அவர்களை அரவணைத்து பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் பட்ஜெட்டை வரவேற்கும் போது, ஸ்டாலின் உதவாக்கரை பட்ஜெட் என கூறியதை மக்கள் விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள 29 முதல்–அமைச்சர்களிலேயே அதிக தூரம் பயணம் செய்து மக்களை சந்தித்து அதிக கோப்புகளில் கையெழுத்திட்டு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் நமது முதல்–அமைச்சர் தான். அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களையும் சென்றடைந்துள்ளது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி பற்றி தொண்டர்கள் கவலைபட தேவையில்லை. 22 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் அது பூஜ்ய கூட்டணி. ஆனால் அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி தான் ராஜ்ய கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசும் போது, அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. போட்ட எந்த திட்டமும் எடுபடவில்லை. தற்போது அந்த கட்சியின் தலைவர் பேசுவதற்கே திணறுகிறார். அவரை மக்கள் ஒரு சிரிப்பு நடிகராக பார்த்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரைக்குள் வரமுடியாத ஸ்டாலின் அ.தி.மு.க.ஆட்சியில் தான் வர முடிகிறது. கிராம ஊராட்சி கூட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். இன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஸ்டாலின் தான் மீமிஸ்சாக வருகிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்திற்கு எந்த திட்டமும், நன்மையும் கிடைக்க போவதில்லை. அ.தி.மு.க. மத்தியில் உள்ள பா.ஜ.க.வுடன் இணைக்கமாக சென்று எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல மக்கள் பயன்பபெறும் திட்டங்களை பெற்று உள்ளது என்றார்.