தற்காலிக நிர்வாகி அல்லது உள்துறை அமைச்சக அதிகாரியை அனுப்பிவையுங்கள் சபாநாயகர் வைத்திலிங்கம் வேண்டுகோள்
புதுவை பிரச்சினைகளை தீர்க்க உள்துறை அமைச்சக அதிகாரி அல்லது தற்காலிக நிர்வாகியை நியமியுங்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு நேற்று 3–வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
கவர்னர் கிரண்பெடி புதுவை நிர்வாகத்தின் அன்றாட செயல்பாட்டில் தலையிடுவதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசானது தேவையற்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அவற்றை விளக்கமாக எழுதி முதல்–அமைச்சர் கவர்னருக்கு கடந்த 7–ந்தேதி கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் கவர்னரிடமிருந்து வராததால் வேறுவழியின்றி முதல்–அமைச்சர் தனது அமைச்சரவை சகாக்களுடன் தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காக கடந்த 13–ந்தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கட்சி தொண்டர்களும், பொதுமக்களும்கூட அந்த இடத்திற்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர். இதைக்கண்டு வருத்தமடைந்த நான் அந்த இடத்துக்கு சென்று சூழ்நிலையை உணர்ந்து பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இப்பிரச்சினையை நான் தீர்த்து வைக்க எண்ணினேன். கவர்னர் விரும்பினால் சமரச பேச்சுவார்த்தை செய்து தீர்த்து வைக்க தயாராக இருப்பதாக கூறினேன்.
அதற்காக கவர்னரை சந்திக்க விரும்பினேன். ஆனால் அவரை சந்திக்க இயலவில்லை. முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் தவிர்க்க இயலாத காரணத்தினால் இம்முடிவை தேர்ந்தெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என நான் உணர்கிறேன்.
புதுச்சேரி மக்களின் நலனுக்காக அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்ட பல திட்டங்களை கவர்னர் பரிசீலிக்காமலும், அதற்கு ஒப்புதல் அளிக்காமலும் இருந்துள்ளார் என தெளிவாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் கவர்னர் கடந்த 14–ந்தேதி கவர்னர் மாளிகையில் இருந்து எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார். இது வருத்தத்தை அளிக்கிறது. அவர் வருகிற 21–ந்தேதிதான் புதுச்சேரிக்கு திரும்பி வருகிறார் என தெரிய வருகிறது.
கவர்னர் இங்கேயே இருந்து இப்போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவருடைய கடமையாகும். ஆனால் முதல்–அமைச்சரும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் கவர்னர் அலுவலகம் முன்பு அமரந்து போராட்டத்தில் ஈடுபடும்போது புதுச்சேரி அரசின் நிர்வாக தலைமையை ஏற்றுள்ள கவர்னர் இந்த அசாதாரண சூழ்நிலையில் வெளியே சென்றுள்ளார் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
எனவே மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாதவாறு இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. எனவே உள்துறை அமைச்சகத்தின் பொருத்தமான பொறுப்பான அதிகாரி ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அல்லது புதுவை மக்களின் நலனை கருத்தில்கொண்டு திறமையான தற்காலிக நிர்வாகி ஒருவரை புதுச்சேரி நிர்வாகத்துக்கு நியமிக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.