ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேட்டி


ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2019 11:30 PM GMT (Updated: 15 Feb 2019 11:25 PM GMT)

ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகை முன்பு இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.

போராட்ட களத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான சஞ்சய்தத் நேற்று வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்சி மேலிடம் சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

அங்கு நிருபர்களிடம் சஞ்சய்தத் கூறியதாவது:–

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளுக்கு எதிராக காந்திய வழியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை கவர்னர் கிரண்பெடி தடுத்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார். முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் கவர்னர் கிரண்பெடி பிரதமர் மோடியின் உத்தரவுப்படி வளர்ச்சி திட்டங்களை தடுத்து வருகிறார். தினந்தோறும் அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் விளம்பரம் தேடுகிறார். இது கவர்னரின் வேலை அல்ல.

ஜனாதிபதி இதேபோல் டெல்லியில் ரோட்டுக்கு சென்று ஆய்வு நடத்துகிறாரா? எந்த மாநிலத்திலும் கவர்னர்கள் இதுபோல் ரோட்டுக்கு வந்ததில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை கவர்னர்கள் யாரும் கையைப்பிடித்து இழுத்ததும் இல்லை. காரைக்காலை கஜா புயல் தாக்கியபோது ஹெல்மெட்டுக்கு எடுத்ததுபோன்று கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்தாரா?

தொடர்ந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். கடந்த முறை டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு டெபாசிட் இழந்தவர் கிரண்பெடி. ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த போராட்டம் காந்திய வழியிலான போராட்டம். மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்காக இந்த போராட்டம் தொடரும்.

பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி, ரங்கசாமி ஆகியோர் மக்களுக்கு எதிராக உள்ளனர். வருகிற தேர்தலில் இது எதிரொலிக்கும். மோடியும், கிரண்பெடியும் தூக்கி எறியப்படுவார்கள். ராகுல்காந்தி பிரதமரானதும் கவர்னர் கிரண்பெடி டிஸ்மிஸ் செய்யப்படுவார்.

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மக்களுக்கு எதிராக உள்ளன. கடந்த 5 வருடத்தில் மத்திய அரசின் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் எந்த வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம்கூட ஒதுக்கித்தரவில்லை. ஆனால் நடிகைகளின் திருமணத்துக்கு மட்டும் நேரம் ஒதுக்கி செல்கிறார்.

முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் 39 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பார்த்து கவர்னர் கிரண்பெடி பயந்து ஓடுகிறார். துணை ராணுவத்தை வரவழைத்து புதுச்சேரி மக்களை மிரட்டுகிறார். அவர் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.


Next Story