மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் தடுப்பதா? அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்
மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் தடுப்பதா? என்று அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசத்துடன் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் நேற்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் கார்களையும், கட்சி முக்கிய நிர்வாகிகளையும் அந்த பகுதியில் துணை ராணுவப்படையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–
காந்திய வழியில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தலைவர்களும் தொண்டர்களும் அமைதியாக உள்ளோம். எங்களது போராட்டத்தை கவர்னர் கிரண்பெடி ஒடுக்க நினைக்கிறார்.
தலைவர்களையும், நிர்வாகிகளையும் போராட்ட களத்துக்கு செல்ல விடாமல் துணை ராணுவப்படையினரை கொண்டு தடுக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு, தண்ணீரை கொண்டு செல்ல விடாமல் தடுக்கப்படுகிறது.
அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தை வன்முறை பாதைக்கு திருப்பி விட முயற்சிக்கிறார். மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் தடுப்பதா?
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.