டாக்டரின் போக்குவரத்து சேவை


டாக்டரின் போக்குவரத்து சேவை
x
தினத்தந்தி 17 Feb 2019 12:30 PM IST (Updated: 16 Feb 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் டாக்டர் ஒருவரை பகுதி நேர போக்குவரத்து சேவையாளராக மாற்றி இருக்கிறது. அவரது பெயர் கிருஷ்ணா யாதவ். நொய்டாவில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

‘‘2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என்னுடைய கிளினிக்குக்கு வழக்கம்போல் சென்று கொண்டிருந்தேன். அன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு ஆம்புலன்ஸ் சாலையின் நடுப்பகுதியில் நெரிசலில் நின்று கொண்டிருந்தது. டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் நெரிசலில் இருந்து ஆம்புலன்சை மீட்க முடியவில்லை. போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது. ஆம்புலன்ஸ்சுக்குள் இருந்த நோயாளியின் நிலையை எண்ணி கவலைப்பட்டேன். மறுநாள் பத்திரிகையில், அவர் இறந்துவிட்ட தகவல் வெளியாகி இருந்தது. அதை பார்த்ததும் போக்குவரத்தை முறைப்படுத்த தினமும் சில மணி நேரத்தை செலவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன்’’ என்கிறார்.

காலை வேளையில் கிளினிக்கில் மருத்துவ பணியில் ஈடுபடும் கிருஷ்ணாயாதவ், மாலையில் சாலையில் நின்று கொண்டு போக்கு வரத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். டாக்டருக்கான ‘கோட்’ அணிந்திருக்கும் அவர் சிறிய ஒலிப்பெருக்கியை தோள் பட்டையில் தொங்கவிட்டுக்கொண்டு மைக்கில் பேசியபடி போக்கு வரத்தை சரி செய்கிறார். சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் அருகில் சென்று சாலை போக்குவரத்து விதிமுறைகளை விளக்கி கூறுகிறார். அது சார்ந்த துண்டு பிரசுரங்களையும் கொடுத்து விழிப்புணர்வை ஏற் படுத்திக்கொண்டிருக்கிறார். ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், மோட்டார் சைக்கிளின் முன் பக்கத்தில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுபவர் களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

‘‘வாகனம் ஓட்டுபவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான மனநிலையில் இருக்கிறார்கள். அறிவுரை வழங்கினால் சிலர் கோபப்படுவார்கள். மனம் நோகும் விதத்தில் கேலி பேசுவார்கள். மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். நான் எதையும் கவனத்தில் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எனது குடும்பத்தினரும் நான் சிக்னல்களில் நின்று விழிப்புணர்வு செய்வதை விரும்பவில்லை. ஏதேனும் விபத்தில் சிக்கி அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்கள். என்னுடைய பேச்சை கேட்டு 2 சதவீதம் பேர் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தால் போதும். அத்தகைய குறைந்தபட்ச மாற்றத்தையாவது சமுதாயத்தில் கொண்டுவந்து விட முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்கிறார்.

முன்பெல்லாம் இவருடைய நடவடிக்கைகளை விமர்சித்த வாகன ஓட்டிகள் இப்போது மனம் மாறி இருக்கிறார்கள். அவருடைய சேவையை பாராட்டி காவல் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Next Story