குறைபாட்டை, வருமானமாக மாற்றிய பெண்


குறைபாட்டை, வருமானமாக மாற்றிய பெண்
x
தினத்தந்தி 17 Feb 2019 1:30 PM IST (Updated: 16 Feb 2019 3:38 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் வசிக்கும் 24 வயது இளம் பெண், டெங் மெய். இவர் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்யும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்.

இப்படிப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்துகொண்டே இருப்பது என செய்து முடித்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்தால்தான் மன திருப்தி அடைவார்கள். தனக்கு ஏற்பட்டிற்கும் அத்தகைய மன நல குறைபாட்டையே வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார், டெங் மெய்.

துணி அலமாரிகளைச் சுத்தம் செய்து, ஆடைகளை அடுக்கி வைப்பதுதான் இவரது தொழில். அதன் மூலம் கிடைத்த வருமானம் இவரை இளம் தொழிலதிபராகவும் மாற்றி இருக்கிறது. ஆரம்பத்தில் டெங் மெய், பேஷன் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார். ஆடைகளை கையாளுவதே தொழிலாக இருந்தாலும் அதுவே அவருக்கு மன நோயாக மாறிப்போனதால் எப்போதும் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அவருடைய வேலை நேர்த்தியை பாராட்டி இருக்கிறார்கள். அவர்களிடம் பகுதி நேரமாக வீட்டு அலமாரியை சுத்தம் செய்து தருவதாக கூறி இருக்கிறார். அவர் நேர்த்தியாக துணி அலமாரிகளை சுத்தம் செய்து கொடுப்பதை பார்த்தவர்கள், இதையே முழு நேரத் தொழிலாகச் செய்யும்படி கூறி இருக்கிறார்கள். அதனையே செயல்படுத்த தொடங்கி விட்டார்.

‘‘என் வீட்டிலேயே திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்து கொண்டிருப்பதைவிட, ஒவ்வொரு வீட்டிலும் இந்த வேலையைச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். எனது குறைபாட்டை பணம் பெறும் வழியாக மாற்றியது போலவும் இருக்கும் என்று முடிவு செய்தேன். இதையடுத்து பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, அலமாரியைச் சுத்தம் செய்து தரும் தொழிலை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சிலர் இதெல்லாம் ஒரு தொழிலா? என்று ஏளனமாக பேசினார்கள். ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் தொடர்பில் இருந்ததால், அவர்கள் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். ஒரு வருடத்திலேயே 100 நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட்டேன். அவர்கள் எனக்கு தொடர்ந்து, வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து விடுவார்கள். சுத்தம் செய்வதில் நிபுணத்துவமும் பெற்று விட்டேன். பள்ளிகளில் மாணவர்களுக்கு வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்றும் உரை நிகழ்த்துகிறேன். என்னுடைய குறைபாட்டையே முதலீடாக வைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டேன்’’ என்கிறார் டெங் மெய்.

Next Story