கழிவு பொருட்களில் கலைப்பூங்கா
பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், பயன்பாட்டுக்கு பிறகு தூக்கி வீசப்படும் இரும்பு தடவாளப்பொருட்கள், மர வேலைப்பாடுகளின்போது மீதமாகும் துண்டு பலகைகள் போன்றவைகளை அப்புறப்படுத்துவது சவாலான பணியாகவே இருக்கிறது.
அவற்றுள் சில பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற் படுத்தவும் செய்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களை கொண்டு கலை வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான பூங்கா நொய்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.
75 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பல்லுயிர் பூங்காவில் வீணாகும் மரத்துண்டுகள், இரும்பு பொருட்கள், காலி பெயிண்ட் டப்பாக்கள், டயர்கள் போன்றவையெல்லாம் மறு உருவம் பெற்று அழகுற காட்சி தருகின்றன. டயர்களில் பல வண்ண நிற பெயிண்ட் அடித்து அவைகளை தொங்கவிட்டு அதில் அலங்கார செடிகளை அழகுடன் படர விட்டிருக்கிறார்கள். மரப்பலகைகள், காலி பெயிண்ட் டப்பாக்களை கொண்டு செயற்கை கிணறு உருவாக்கி அதில் அருவி போன்ற தோற்றத்தை ஜொலிக்கும் விளக்குகளால் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். செங்குத்து தோட்டங்கள், இருக்கைகள், அலங்கார வேலைப்பாடுகள் எல்லாமே வீணாகும் பொருட்களில் கலைநயத்துடன் அங்கு மிளிர்கின்றன.
இதுபற்றி பூங்காவின் பொது மேலாளர் ராஜூவ் கூறுகையில், ‘‘நொய்டா தொழில் நகரமாக விளங்குவதால் சரக்கு பெட்டகங்கள் அதிக அளவில் கையாளப்படுகிறது. அங்கு பெரும்பாலான பொருட்கள் மரப்பலகைகளால் பேக்கிங் செய்யப்படுகின்றன. அதனால் மரப்பலகைகள் குப்பைகளாக மாறிவிடுகின்றன. அவைகளை அழகு பொருட்களாக மாற்ற முடிவு செய்தோம். இதன் மூலம் உள்ளூர் கலைஞர் களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். பொதுமக்கள் மத்தியில் மறுசுழற்சி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story