அலங்காநத்தம் ஜல்லிக்கட்டில் 345 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் உள்பட 15 பேர் காயம்
நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம் கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 345 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி தள்ளியதில் 8 மாடுபிடி வீரர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல்,
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் கிராமத்தில் நடந்தது. இதையொட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் அனைவரும் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதை தொடர்ந்து கோவில் மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.
பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து கயிறு அறுத்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அதனையும் மீறி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மின்விசிறி, நாற்காலி, வயர் கட்டில்கள், குடம், சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு, தங்கக்காசு மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியேவந்த பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்ததையும், ஒருசில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்துவதையும் காண முடிந்தது.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், போடிநாயக்கன்பட்டி, மங்களபுரம் பகுதிகளை சேர்ந்த காளைகள் மட்டுமின்றி திருச்சி, சேலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 345 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 161 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் மாடுகள் முட்டி படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் அலங்காநத்தம் சசிக்குமார் (வயது 25), பண்ணைகாரன்பட்டி பழனியப்பன் (23), பொட்டிரெட்டிபட்டி விக்னேஷ் (25), பவித்திரம் மோகன்ராஜ் (28) மற்றும் பார்வையாளர்களாக வந்த அலங்காநத்தம் முருகேசன் (27), மண்கரடு பேரரசு (16) ஆகிய 6 பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல் மாடுகள் முட்டியதில் காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் வடவத்தூர் ரமேஷ் (22), பொட்டிரெட்டிப்பட்டி சதீஸ்குமார் (23), எருமப்பட்டி ரஞ்சித்குமார் (25), பொன்னேரி மணி (22), பொட்டிரெட்டிப்பட்டி விக்னேஷ் (23), முகேஷ் (22) ஆகிய 6 பேரும், ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்தவர்களான சுக்கலாம்பட்டி தம்பு (45), அலங்காநத்தம் நல்லுசாமி (72), போடிநாயக்கன்பட்டி ஜெயக்குமார்(22) ஆகிய 3 பேரும் என 9 பேர் அங்கேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த ஜல்லிக்கட்டியில் மாடுகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 15 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜல்லிக்கட்டை காண அலங்காநத்தம், எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் அலங்காநத்தத்தில் கூடி இருந்தனர். இவர்கள் அவ்வப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர்.
இதேபோல் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, அவற்றின் மீது ஏறியும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை ரசித்தனர். சில இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும் ஜல்லிக்கட்டை ரசிப்பதை காண முடிந்தது.
இந்த ஜல்லிக்கட்டிற்கு 346 காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் ஒரே ஒரு காளை மட்டும் அனுமதிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story