தஞ்சை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தல்


தஞ்சை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 5:15 PM GMT)

பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தஞ்சை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மானாங்கோரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். செயலாளர் விமல்நாதன், தலைவர் சின்னதுரை, நிர்வாகிகள் தருமராஜன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2016–17, 2017–18–ம் ஆண்டுகளுக்குரிய பயிர்க் காப்பீட்டு தொகையான ரூ.118 கோடியை பயிர்க் காப்பீட்டு நிறுவனம், மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கிகள் வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவதை கண்டித்தும், காலதாமதத்திற்குரிய வட்டியுடன் உடனே காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதில் கலந்து கொண்ட விவசாயிகள், நாமம் போடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இது குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016–17–ம் ஆண்டு சம்பா பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டது. கடுமையான வறட்சியால் மகசூல் இழப்பை கணக்கிட்டு இழப்பீட்டு தொகையை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


2017–18–ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பயிர்க் காப்பீட்டு தொகையான ரூ.118 கோடியை தமிழகஅரசு, விதிகளுக்கு புறம்பாக கஜா புயல் நிவாரணத்திற்கு மாற்றிவிட்டதாக விவசாயிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. எனவே பயனாளிகளின் முகவரி, புல எண், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு காப்பீட்டு தொகை வந்த நாள், இன்னும் வரவேண்டிய தொகை, நிலுவையில் உள்ள விவசாயிகளின் பட்டியலை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

உடனே காப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story