தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி


தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 17 Feb 2019 5:00 AM IST (Updated: 17 Feb 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

திருச்சி,

சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர். சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.

பலியான துணை ராணுவ வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோரது உடல்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் ஆக மொத்தம் 4 துணை ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

உடல்களுடன் வந்த விமானம் திருச்சிக்கு நேற்று பகல் 11.10 மணி அளவில் வந்தடைந்தது. இதில் அரியலூர் சிவசந்திரன் உடல் மட்டும் தனியாக இறக்கப்பட்டது. தூத்துக்குடி சுப்ரமணியனின் உடல், கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரரின் உடல் மற்றொரு தனி விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மந்திரி சீதாராமன் பாதுகாப்பு துறை விமானத்தில் நேற்று காலை 10.35 மணி அளவில் திருச்சி வந்தார். பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக விமானநிலைய முனையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தனி விமானத்தில் வந்த வீரர் சிவசந்திரன் உடலை பகல் 11.45 மணி அளவில் விமானநிலையத்தின் உள்ளே இருந்து துணை ராணுவ வீரர்கள் சுமந்து வெளியே வந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது வெள்ளை துணியும், தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தன. அவரது உடலை அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த இடத்தில் வைத்தனர்.

சிவசந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது மைத்துனர் அருண், சித்தப்பா கண்ணன், மற்றும் உறவினர்கள் ஜெயபால், குணவேல் ஆகியோர் வந்திருந்தனர். சிவசந்திரன் உடல் வந்து இறக்கப்பட்டதும், அவர்கள் 4 பேரும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க ஓடி வந்து சவப்பெட்டியின் மீது விழுந்து அழுதனர்.

அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிறிது நேரம் அவர்கள் அஞ்சலி செலுத்தியபின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியான சிவசந்திரனின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சிவசந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைதொடர்ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரரின் உடல் வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என இளைஞர்கள் கோஷமிட்டனர்.

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் பலர் நேற்று காலை 9 மணிக்கு விமானநிலையம் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. பலர் கையில் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு இறுதி யாத்திரையாக புறப்பட்டது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக வந்த சுப்பிரமணியனின் உடலுக்கு ஆங்காங்கே அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடி ஏந்தியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சுப்ரமணியனின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மாலை 4.20 மணிக்கு சுப்ரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியை வந்தடைந்தது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இருந்து சுப்ரமணியனின் உடலை ராணுவ வீரர்கள் இறக்கி, அவரது வீட்டின் முன்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். அப்போது சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாயார் மருதம் அம்மாள், தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சுப்ரமணியனின் உடல் இருந்த பெட்டியின் மீது ராணுவ வீரர்கள் தேசிய கொடி போர்த்தினர். தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணியனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வீரமரணம் அடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி ரம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணா சிங், பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். மாலை 5 மணி அளவில் சுப்ரமணியனின் உடலை வீரர்கள் ராணுவ வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடலை சுமந்தவாறு ராணுவ வாகனம் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது.

சவலாப்பேரியில் உள்ள சுப்ரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்தவாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

மக்கள் வெள்ளத்தின் இடையே ராணுவ வாகனம் ஊர்ந்து வந்தது. சுப்ரமணியனின் தோட்டத்துக்கு ராணுவ வாகனம் வந்ததும், அவரது உடலை ராணுவ வீரர்கள் இறக்கி வந்தனர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள், முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சுப்ரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியனின் உடல் அடக்கத்தையொட்டி அந்த கிராமமே சோகக்கடலில் மூழ்கி இருந்தது.

Next Story