தவறான சிகிச்சையால் மாநகராட்சி ஊழியர் இறந்ததாக புகார் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
புதுவண்ணாரப்பேட்டையில், தவறான சிகிச்சையால் மாநகராட்சி ஊழியர் இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு டாக்டர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் பேபி. சென்னை மாநகராட்சியில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவருடைய மகன் பாஸ்கர் (வயது 39). இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பாஸ்கர், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில் சுகாதாரத்துறையில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பாஸ்கருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த 2 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பாஸ்கர் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பாஸ்கரின் உறவினர்கள், லேசான வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு வந்த பாஸ்கருக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் அவர் இறந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் பேசினர். பின்னர் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story