தூத்துக்குடியில் ரூ.298½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்


தூத்துக்குடியில் ரூ.298½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:00 AM IST (Updated: 17 Feb 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் ரூ.298½ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி, 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் ரூ.298½ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

ஸ்மார்ட் சிட்டி

தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. அதில் முதல்கட்டமாக மழைநீர் வடிகால் கட்டுதல் பகுதி-1 பணி ரூ.175.68 கோடி திட்ட மதிப்பீட்டிலும், மழைநீர் வடிகால் கட்டுதல் பகுதி-2 பணி ரூ.77.36 கோடி திட்ட மதிப்பீட்டிலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ரூ.35.84 கோடி திட்ட மதிப்பீட்டிலும், பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.4.06 கோடி மதிப்பீட்டிலும், மேற்கூரை சூரிய ஒளி மின்உற்பத்தி அமைப்பு ரூ.1.55 கோடி, மின் ஆற்றல் சேமிப்பு தெரு மின்விளக்குகள் அமைத்தல் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும் என ரூ.298.49 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் வரவேற்றார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ரூ.18 லட்சம் மதிப்புள்ள ரோபோ எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

மிகச்சிறந்த மாநகராட்சி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளில் தலா ரூ.1,000 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்துகின்றன. அதில் முதல் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தான் பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் ரூ.298.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அது முடியும் நிலையில் உள்ளது. மாநகராட்சி வளாகத்தில் எல்.இ.டி. திரை, சோலார் மின்விளக்கு வசதிகள் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றார் போல் தேவையான அனைத்து வசதிகளையும் நடைமுறைப்படுத்தும் நகரமாக தூத்துக்குடி உள்ளது.

விரைவில் ரூ.48 கோடி மதிப்பில் புதிய பஸ்நிலைய விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த பணிகள் முடியும் நிலையில் சாலை வசதிகள் சீராக இருக்கும். பாதாள சாக்கடை வசதிக்கு வருகிற 10 நாட்களுக்குள் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் பாதாள சாக்கடையில் சேரும் வகையில் இணைக்கப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மிக சிறந்த மாநகராட்சி என்ற இடத்தை பிடிக்கும். தமிழகத்தில் தற்போது புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளில் போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்படும்போது, தூத்துக்குடி மாநகராட்சிக்கும் போலீஸ் கமிஷனர் நியமிக்கப்படுவார். மக்கள் விருப்பப்படி பஸ்நிலைய விரிவாக்கம் நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய தார் சாலைகள்

கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தூத்துக்குடி நகராட்சியாக இருந்ததை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின், தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி, அமைச்சராக இருந்த நான் ஆகியோர் எடுத்த முயற்சியின் காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பின்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நகரின் தரத்தை உயர்த்தும் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக தூத்துக்குடியில் துப்புரவு பணியில் ரோபோ எந்திரத்தை அறிமுகப்படுத்தியதை பாராட்டுகிறேன். ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பூங்காக்கள் அமைக்கும் பணி மட்டுமே இதுவரை நடைபெற்று உள்ளது. 4-வது குடிநீர் குழாய் திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்னும் பல பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் குழாய்களை இணைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும். சாலைகளை சீரமைத்து புதிய தார்சாலைகள் அமைக்க வேண்டும். பழைய பஸ்நிலையத்தை மேம்படுத்தும்போது ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் கடைகளை வழங்க வேண்டும். கடைகள் தரை தளத்திலேயே அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story