சானூரப்பட்டியில், சாலை விரிவாக்கத்தின்போது அப்புறப்படுத்தப்பட்ட மயானத்தை மீண்டும் அமைத்து தர வேண்டும்


சானூரப்பட்டியில், சாலை விரிவாக்கத்தின்போது அப்புறப்படுத்தப்பட்ட மயானத்தை மீண்டும் அமைத்து தர வேண்டும்
x
தினத்தந்தி 16 Feb 2019 10:45 PM GMT (Updated: 16 Feb 2019 7:24 PM GMT)

சானூரப்பட்டியில், சாலை விரிவாக்கத்தின்போது அப்புறப்படுத்தப்பட்ட மயானத்தை மீண்டும் அமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

பிள்ளையார்பட்டி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சானூரப்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பூதலூர் ஒன்றிய செயலாளர்கள் செல்லக்கண்ணு, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சானூரப்பட்டி ஊராட்சி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது குடிநீர் வசதிக்காக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஏழை முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.

சானூரப்பட்டியில், சாலை விரிவாக்கத்தின்போது ஆதிதிராவிடர்களுக்கான மயானம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. எனவே மீண்டும் அந்த மயானத்தை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து மயானம் அமைப்பதற்காக வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகள், பொதுமக்களின் நலன் கருதி சானூரப்பட்டியில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சானூரப்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாகவும், வெளியூர் செல்லும் பயணிகள் அதிகளவில் இங்கு இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு செல்வதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பழனிராசு, சரவணன், சின்னராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அய்யா கார்த்திக் நன்றி கூறினார்.

Next Story