மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி


மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே துணை ராணுவ வீரர் சிவசந்திரனின் ஆசை என்று அவரது மனைவி காந்திமதி கூறினார்.

ஜெயங்கொண்டம்,

நாட்டிற்காக உழைக்கவே எனது கணவர் ராணுவத்திற்கு சென்றார். அவர் சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். கடந்த வாரம் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, தான் பணிபுரிந்த பழைய இடத்திற்கு வந்துவிட்டதாகவும், அதனால் தன்னைப்பற்றி கவலைப்படாமல் மகனையும், கருவில் சுமக்கும் குழந்தையையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அதற்குள் அவர் கார் குண்டு தாக்குதலில் பலியான சம்பவத்தை டி.வியில் பார்த்து அதிர்ந்து போனேன். விடுமுறையில் ஊருக்கு வரும்போது என்னிடம், நான் உயிருடன் இருக்கும் போது என்னுடைய மரியாதை தெரியாது. நான் இறந்த பின்பு தான் தெரியும், என்பார். இப்போது அவர் இறந்ததால் மத்திய மந்திரி, மாநில அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் அதை பார்க்க அவர் இல்லையே என கூறியபடி கதறி அழுதார்.

மேலும் கூறுகையில், அவர் அடிக்கடி மகனுக்கு சல்யூட் அடிப்பார். எதற்கென கேட்டால் அவனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக இப்போதே மரியாதை செய்கிறேன். அவனை கண்டிப்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆக்குவேன் என்றார். அவரது ஆசையை மத்திய, மாநில அரசுகள் தான் நிறைவேற்ற வேண்டும். நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தார். தற்போது எங்களுக்கென்று யாரும் இல்லை. வயிற்றில் ஒரு குழந்தையும், கையில் ஒரு குழந்தையும் வைத்துள்ளேன். அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story